Saturday 30 March 2024

நிறையாத மனது

நிறையாத மனது


எண்ணமும்
எழுத்தும்...

ரா..ஆனந்தன்

 

ஒரு சிறு வரலாற்றுக் கதையினை முதலில் பகிர்ந்துவிட்டு, பிறகு என்னுடைய எண்ணங்களை விவரிப்பது  சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்குப் பகுதியினை ஆட்சி புரிந்த மன்னர் முஞ்சாவின் ஆட்சியின் போது, ஒரு ஜோதிடர் முஞ்சாவின் அண்ணன் மகன் போஜா நீண்டகாலம் இந்த நாட்டினை ஆள்வார் என்று கணித்ததார்தன் மகனே அரசனாக வேண்டும் என்று விரும்பிய முஞ்சா, தன் முத்த சகோதரர் மகன் போஜாவின் மீது பொறாமை கொண்டு போஜாவைக் கொல்ல உத்தரவிட்டான்.

இன்றைய குஜராத் மாநிலத்தின், புவனேஸ்வரி காட்டில் உள்ள மகாமாயா கோவிலில் போஜனைக் கொல்ல முஞ்சாவின் உத்தரவுபடி ஏற்பாடு நடந்தது. கொல்லப்பட போவதினை உணர்ந்துகொண்ட போஜன், கொல்லவந்த தளபதியிடம் ஒரு தகவலை மட்டும் தனது சித்தப்பா முஞ்சாவிடம் தெரிவித்துவிட்டு கொல்லுமாறு கேட்டுக்கொண்டான்.

போஜாவின் நாகரீகமான பேச்சைக் கேட்ட அரசன் முஞ்சாவின் தளபதியும் (வத்சராஜா) அவனது ஆட்களும் கொலைத் திட்டத்தைக் கைவிட்டனர். அவர்கள் போஜாவின் மரணத்தைப் பொய்யாக்கி, போஜாவின் ஒரு போலியான தலையையும், போஜனின் ஒரு கவிதைநடை வசனத்தையும் முஞ்சாவிடம் வழங்கினார்கள்.

முன் யுகங்களில் வாழ்ந்த மாமன்னர்கள் மாந்தாதா, ராமர் மற்றும் யுதிஷ்டிரர் போன்ற பெரிய மன்னர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு எப்படி இறந்தார்கள் என்பதை அந்த வசனம் விவரித்தது; ஆனால் பூமிக்குரிய உடைமைகள் யாவையும் முஞ்சாவை மட்டுமே பின்தொடரப்போவதாகவும் அது கிண்டலாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருந்தது.

அந்த வசனமும், அதனை வெளிப்படுத்தி இருந்த விதமும் முஞ்சாவிற்கு கண்ணீரை வரவழைத்தது, தன் தவறை அவனுக்கு உணர்த்தியது. போஜா இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்ததும், போஜாவை மீண்டும் தனது நீதிமன்றத்திற்கு வருமாறு அழைத்தார். அவர் செய்த பாவத்திற்காக வருந்தி, மன்னிப்புக் கேட்டு போஜனை அரியணையில் ஏற்றி அழகு பார்த்ததாகவும் கதை சொல்லப்படுகிறது.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் மேலேக் கண்ட கதையின் சாரத்திணை காணலாம். தனது மகனே முடிசூடவேண்டும் என்று ஆசைகொண்ட கைகேயின் தந்திரமும், பிடிவாதமும் தசரதனை கொன்று ராமனை காட்டிற்கு அனுப்பியது. பிறகு நடந்த அனைத்தினையும் நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்போம்.

அழகிலும், அறிவிலும், கற்பிலும் சிறந்த தனது மனைவி மண்டோதரியின் மனதினை புண்படுத்தி, இன்னொருவர் மனைவியினை சிறைபிடித்த இலங்கை அரசன் இராவணனின் முடிவும் இன்னபிற இழப்புகளும் ராமாயணத்தில் மிகசிறப்பாக கூறப்பட்டிருக்கும். ராமாயணமும், மகாபாரதமும் மண்ணாசையாலும், பெண்ணாசையாலும் விளைந்த கேடுகளை மிகசிறப்பான முறையில் நமக்கு சொல்லியிருக்கும்.       

ஆக ஆதிகாலம் முதலே மனிதனுக்கு பேராசையும், பொறாமையும் இருந்து வந்திருக்கின்றன. கடவுளாக துதிக்கப்படும் ராமரும், கிருஷ்ணரும் வாழ்ந்த காலத்திலும் இந்த எல்லாத் தவறுகளும் நடந்திருக்கின்றன. அதன் மூலம் நிகழ்ந்த ஈடில்லா இழப்புகளைக் கண்டும், புரிந்தும் தொடர்ந்துவந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள் முன்னைவிடவும் அதிகமான ஆசைகளையும், ஆணவத்தினையும் தன்னகம் கொண்டு  செய்தத் தவறுகளையும், பாதிப்புகளையும் சொல்லிமாளாது.   

வலைத் தேடலில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த சர்வாதிகாரிகளை பற்றிய விவரங்களை படித்தபோது மிகவும் வேதனையே மிஞ்சியது. தனிமனிதனின் வக்கிரபுத்தியினால் ஓட்டுமொத்த சமுதாயமும், ஒருசிலரால் உலகம் முழுவதுமே சிரமத்துக்கு உள்ளானது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அவைகளில் வெகுசிலரை பற்றி விவரித்துவிட்டு பின் எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன். இவர்கள்தாம் முதல் சில இடங்களை பிடித்த சர்வாதிகார்கள் ஆவார்கள்.

அடால்ஃப் ஹிட்லர் - இரண்டாம் உலகப் போருக்கு முழுமையான காரணமாணவர்.  6 மில்லியன் யூதர்களைக் கொன்று தன்னைத்தானே கொன்றுக்கொண்ட மனநோய் பிடித்தவர். (ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆட்சி செய்தவர்)

பெனிட்டோ முசோலினிபாசிசத்தை விளைத்தவன் (இத்தாலியன்), இறுதியில் அதே மக்களாலேயே கொல்லப்பட்டதும் உலகமறிந்த செய்தியாகும்.

இவான் தி டெரிபிள் - ஹிட்லரையே மிஞ்சியவன், ரஷிய வரலாற்றிலேயே மனநலம் பாதிக்கபட்ட அரசன்.

விளாட் தி இம்பேலர் - ருமேனியாவில் பிறந்த ரஷ்யன். இலட்சக்கணக்காணவர்களை கழுவிலேற்றிக் கொன்றவன்.

இடி அமின் - உகாண்டாவை சேர்ந்தவர். கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர்.

சதாம் உசேன் - மானிட அழிப்பில் ஈடுபட்ட ஈராக்கின் சதாம் உசேன் 25 ஆண்டுகள் ஈராக்கை ஆண்ட சர்வாதிகாரி.

போல் பாட் - கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். கிட்டத்தட்ட 1 மில்லியனிலிருந்து- 2 மில்லியன் அல்லதுமில்லியனிலிருந்து- 3 மில்லியனுக்கும் (வேறுபட்ட மூலத்தகவல்படி) வியட்னாம் மக்களை படுகொலை செய்யப்பட்டதாக ஆதாரங்களால் அறியப்பட்டது.

லியோபோல்ட் II - பெல்ஜியத்தின் காலணியாக இருந்த காங்கோ நாட்டு மக்களை பணத்தின் மட்டில் பேராசை கொண்டு இலட்சக்கணக்கானவர்களை கொன்றவர்.

ஜோசப் ஸ்டாலின் - சோவியத் ரஷ்யாவை முன்னேற்றப் பாதையில் படுவேகமாகக்கொண்டு சென்றவர் ஸ்டாலின் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய முதல் ஐந்தாண்டுத் திட்டம் பெரும் வெற்றியடைந்தது உண்மை. ஆனால், அந்தக் கட்டாய வளர்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் தங்கள் உயிர்களை காணிக்கையாகத் தரவேண்டி வந்தது நிஜம். எதிர்ப்பு என்பதே துளிக்கூட இல்லாத சர்வாதிகார ஆட்சியாக தன் ஆட்சி அமையவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பலிகொடுத்த மக்களின் எண்ணிக்கை திகைப்பை ஏற்படுத்தும்.

செங்கிஸ் கான் - 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார்.



பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த செங்கிஸ்கான், நகரங்களை சூறையாடியபடியே, பீஜிங் முதல் மாஸ்கோ வரை பல நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

மாவோ சேதுங் - "உழுபவருக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன் வைத்து நிலமற்ற விவசாயிககளை ஒன்று திரட்டி ஆயுதம் தாங்கிய ஒரு படையை நிறுவினார். சர்வாதிகாரத்தை ஆதரித்த அவரது கருத்தினால்  இலட்சக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர்.

கஜினி முகமதுவும், அவுரங்கசிப்பும், அலாவுதீன் கில்ஜியும், மாலிக் கபூரும் இந்த குறிப்புகளில் இடம் புரியவில்லை இருந்தாலும் இந்தியாவின் கலாசாரத்தினையும், செல்வத்தினையும் அழித்ததில் பெரும்பங்காற்றியவர்கள். இதையெல்லாம் தாண்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலக சரித்திரத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக இருந்திருக்கிறது.    

இப்படித் தொடரும் இந்த வரிசை மிகவும் நீளமானது. இவர்களது வரலாறினைப் படித்தால் குறைந்தபட்சம் சிலநாட்கள் தூக்கம் தொலைப்பது நிதர்சனம்.  

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் இவர்களுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்தவர்கள். இவர்களும் தங்களது அரசின் எல்லைகளை கடல் கடந்து விரிவாக்கம் செய்த்தவர்கள்தாம். நம் மண்ணை சேர்ந்தவர்கள் என்பதற்காக இவர்கள் செய்த எல்லா போர்களும் சரியானது என்று என்னால் சொல்லமுடியாதுமேலே குறிப்பிட்டவர்களை ஒப்பிடுகையில் நமது மன்னர்கள் அவ்வளவு கொடுங்கோல் புரிவில்லை என்பதே உண்மையாகும். அசோக மகாராஜன் கொடுங்கோல் புரிந்ததை உணர்ந்து அதற்கு ஈடுசெய்யும் வழியில் கடைசிகாலம் வரையில் நல்லது புரிந்து வாழ்ந்தான். எனினும் அவரது தொடக்ககால ஆட்சி மிகவும் கடினமானது

இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான சர்வாதிகாரிகளுக்கு கடவுள் நம்பிக்கையும், குடும்பப்பற்றும் இருந்திருக்கிறது. கிட்டதிட்ட அனைத்து சர்வாதிகாரிகளும் ஆண்களாகவே இருந்திருக்கிறார்கள். அதிகாரத்தினையும், ஆணவத்தினையும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாகவே வரலாறினை விட்டுச்சென்றிருக்கிறார்கள். ஆங்காங்கே சொற்பமான பெண் சர்வாதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள் இருந்தாலும் ஆண்கள் அளவிற்கு மிகவும் மோசமான பாதிப்புகளை உண்டாக்கியதற்கான சான்றுகள் குறைவானதாகவே இருக்கிறது.



ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஆண் சர்வாதிகாரிகள் பெரும்பாலும் பெண் பித்தர்களாக இருந்தபோதிலும் அந்த பெண்களால் ஏன் அவர்களை ஆட்க்கொள்ளமுடியாமல் போனது. கேள்விகேட்கும் அளவிற்கு அவர்களுக்கு உரிமை தரப்படவில்லையா அல்லது அவர்களது வரம்புகளின் நிலைபாடு அப்படி இருக்கப்பெற்றதா ? இந்த நிலையின் எச்சம் இன்றளவும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

வாழ்வாதாரத் தேடலை முதன்மையாகக் கொண்டே  இவர்களது எல்லைத்தாண்டிய பயணம் துவங்கியிருக்கிறது. ஆதாரங்களை முழுவசப்படுத்திக்கொள்ளும் பொருட்டும், அளவுகோல் அற்ற ஆசைகளும் தங்களது எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ளவும், உரிமைகளை நிரந்தரமாக கொண்டாடிடவும் தூண்டியிருக்கிறது. அண்டை நாட்டவர்களின் தோல்விகளும், பயமும் சர்வாதிகாரிகளின் அதிகாரப் பசியையும், புகழையும்  மேலும் தூண்டியிருக்கிறது. நேர்மையற்ற யுத்தங்களும், ஏமாற்று வழிகளும் இவர்களது யுக்திகளாக இருந்திருந்தன.

இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல உள்நாட்டு மற்றும் ஏனையப் போர்களுக்கு பின்னும்பெரும்பாலும் வளர்ந்த அல்லது அதிக அதிகாரத்துடன் திகழும் வெளிநாடுகளின் சதியும், அரசியலும் முன்னின்று நடத்துகின்றன என்பதே உண்மையாகும். இதன் பின்புலத்தில் கனிம வளங்கள், எரிபொருள், தண்ணீர், மனிதவளம் இப்படி எதோ ஒன்றினை கவர்ந்துசெல்வதும், தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் மேற்கொள்ளப்படும் தந்திரங்களாகவே இவை இருக்கக்கூடும்.

புதிது புதிதாக காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அது சமயங்களில் அவர்களது பார்வையில் சரியாக இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் பெரும்பாலும் அந்தப் போருக்குப்பின் ஒருசாராருக்கு பலன் அளிக்கும் வகையில் ஏதோ ஒரு அரசியல் தந்திரம் இருக்கக்கூடும். மனிதம் இருக்கும் வரையிலும் இந்த மாதிரியான தந்திர போர்களை நிறுத்தமுடியாது. அவைகளின் வடிவமும், ஏவப்படும் விதங்களும் மாற்றம்கொள்ளும்.

வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் இயற்கை பேரழிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் இழந்தவைகளும் மனிதத் தவறுகளாலும், அது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பெற்ற இன்னபிற போர்களினாலும் ஏற்படுத்தபட்ட அழிவுகளை விடவும் குறைவானதாகவே இருக்கக்கூடும்.   

தேவையற்றப் போர்களினால் நிறைய நல்ல மனிதர்களின் சந்ததிகளே இல்லாமல் அழிந்திருக்கின்றன. இவர்களில் வெகுபலர் அப்பாவிகளாகவே இருந்திருப்பார்கள். ஆனால் இன்றளவும் என்றைக்கோ வாழ்ந்த மங்கோலிய சர்வாதிகாரி செங்கிஸ்கானின் நேரடி அல்லது மரபணுக்களின் அடிப்படையாக அமைந்த வாரிசுகளின் எண்ணிக்கை மட்டும் 1.6 மில்லியனைத் தாண்டி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்தான் உலகிலேயே அதிக பிள்ளைகளையும், மனைவிகளையும் (அதிகார பூர்வமான மனைவி எத்துணை பேர் என்று தெரியவில்லை) கொண்டவர் என்று சரித்திரம் சொல்கின்றது. இது அந்த நாட்டின் (மங்கோலியா) பாதி மக்கள் தொகையாகும். அவர் வாழ்ந்து எத்துணையோ நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் அவரது மரபணுத் தொடர்ந்து வாழ்கின்றது. இதனை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியாது கடவுள் நம்பிக்கைக் கொண்ட பலர் பதிலற்று கடந்து செல்கிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள எல்லா இடங்களும் எல்லா வளங்களோடும் அமையவில்லை. புவியியல் தன்மையின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் வளங்களின் தன்மைகள் மாறுபடும். புவியியல் தன்மையின் அடிப்படையில் உயிரினங்களின் தன்மை மற்றும் மனிதர்களின் இயல்பும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்டு இருக்கும்.

தேவைகளின் தேடலே உலகின் பிற பகுதிகளிலிருந்து அதற்கானத் தீர்வு மற்றும் மாற்று வழிகளைக் கண்டுகொள்ளச் செய்கிறது. தொழில்நுட்ப அறிவு மற்றும் அதன் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இந்த சிந்தனை அவ்வப்போது மாறுகிறது, அதனைத் தொடர்ந்து அதேமாதிரியான மற்றும் அது தொடர்புடைய பிரிவுகளின் வளர்ச்சிகள் மாற்றம் பெறுகின்றன. மேற்கூறிய அனைத்திற்கும் மேலாக மனிதர்களின் மனோபாவமும், அவர்களின் பேராசையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது அதன் சூழ்நிலைகளுடன் அப்படி வாழ வைக்கும் தகவமைப்புகள் மற்றும் மாற்றுகளைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.


ஆனால் அதன் இயற்கையின் அருளால் உலகில் வாழும் உயிரினங்களால் எதையும் தீவிரமாக மாற்ற முடியாது. சில மாற்றங்கள் நிகழலாம் ஆனால் இயற்கைக்கு முன்னால், அது என்றும் நிரந்தரமாக இருந்துவிட இயலாது. இதுவரை மனிதனோ அல்லது வேறு எந்த விலங்குகளோ இந்த பூகோளத்திலிருந்து எதையும் எடுத்துக்கொண்டு நிரந்தரமாக அல்லது காலாவதி தேதிகள் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழியில் வாழ்கின்றன என்பதற்கான சரித்திரமோ ஆதாரமோ இல்லை. சுருங்கச் சொன்னால், இந்தப் பூகோளத்திலிருந்து உருவாகும் அனைத்து உயிரினங்களும், எதையும் சுமக்காமல் இங்கேயே அழிந்து வருகின்றன. எதிர்காலத்தில் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து உயிரினங்களைக் கண்டால், நாம் மேலே விவாதித்த கருத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

நமது வாழ்க்கை மிகவும் குறுகியது & அது காலாவதி தேதிகளைக் கொண்டுள்ளது. இதன் கால அளவுகோல் நமக்கு சரியாகத் தெரியாது, இது நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும் ஒருவருக்கு எல்லாம் சரியாக நடந்தால் அவருக்கு வழங்கப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் அதிகபட்ச ஆயுட்காலம் 110 ஆண்டுகள் இருக்கலாம்.

நாம் வாழும் போது நம்மை சந்தைப்படுத்திய விதத்தைப் பொறுத்து நாம் வாழ்ந்த விதம் மற்றும் நினைவுகள் நம்மைச் சிறிது காலம் இந்த மண்ணில் வாழவைக்கும். வாழ்க்கை வாழ்வதேற்கே. உண்மையான வழியில் வாழவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நல்ல சூழலை விரிவுபடுத்தவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த உலகத்திலிருந்து யாரும் எதையும் எடுத்துச் செல்லவே முடியாது.

நல்ல ஒழுக்கங்களும் அதன் மதிப்புகளும் உலகில் உள்ள மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களிலிருந்து மனிதனாக நம்மை வேறுபடுத்துகின்றன. நாகரீகம் அதன் கொள்கைகளுடன் கூடிய வாழ்க்கை முறைகளின் அடிப்படையில் நமது அவதானிப்புகளின் அடிப்படையில் உலகில் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து நாம் வேறுபடுகிறோம்.

உண்மையில் அவர்களின் (தாவரங்கள் மற்றும் இதர விலங்குகள்) கலாச்சாரங்கள் நம்முடையதை விட சிறந்ததாகவும் இருக்கலாம். நமக்கு அது முழுமையாகத் தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்ஏனென்றால் நாம் அனைவருமே மிகவும் சிறந்த கொள்கை ரீதியான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதில்லை. ஆகையினால் மற்ற உயிரினங்களையோ அல்லது விலங்குகளையோ விமர்சிக்க நமக்கு போதுமானத் தெளிவும், அறிவும் இல்லை என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் அவற்றின் ஒழுக்கம் மற்றும் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் அவற்றைப் பற்றி 100% உறுதியாக நமக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப அவர்களின் சொந்த ஒழுக்கங்களையும் கொள்கைகளையும் கொண்டிருக்கலாம் என்பது எனது கருத்து மற்றும் நான் அந்தக் கருத்தினை முழுமையாக நம்புகிறேன். 

மீண்டும் வேறொரு தலைப்புடன் சந்திப்போம்.